அரியலூர்
மாரியம்மன் கோவில் தேரோட்டம்
|முடிகொண்டான் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
மாரியம்மன் கோவில்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், முடிகொண்டான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மங்கள விநாயகர், முருகன், மாரியம்மன், செல்லியம்மன், அய்யனார், பெரியசாமி மற்றும் கருப்புசாமி ஆகிய தெய்வங்கள் உள்ளன.
இந்த கோவிலின் திருவிழா கடந்த 27-ந்தேதி சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 28-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு மலர் மற்றும் மின்னொளி அலங்காரத்துடன் மாரியம்மன், கருப்புசாமி வீதியுலா, வாணவேடிக்கை மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
தேரோட்டம்
கடந்த 3-ந்தேதி அதர்வன பத்ரகாளி, அங்காளம்மன் பம்மை தெய்வீக நடனம் நடைபெற்றது. நேற்று காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில், மலர் அலங்காரத்துடன் மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்தனா். அப்போது வீடுகள் தோறும், பக்தர்கள், மாவிளக்கு போட்டும், தீபாராதனை காண்பித்தும் அம்மனின் அருளை பெற்றனர். தேரோடும் வீதிகளில், தேர் வலம் வந்து கோவிலை அடைந்தது.
விழாவில் அன்னதானம் நடைபெற்றது. இரவு வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை, கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.