சேலம்
மாரியம்மன் கோவில் தேரோட்டம்
|கோவிந்தம்பாளையம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தலைவாசல்:
கோவிந்தம்பாளையம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
கோவில் விழா
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கோவிந்தம் பாளையம் மாரியம்மன் கோவிலில் கடந்த 19-ந் தேதி காப்பு கட்டி, சக்தி அழைப்புடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மாரியம்மன் பிறப்பு பற்றி சொற்பொழிவு நடந்தது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் காத்தவராயன் கழுகு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக அங்கப்பிரதட்சணம் செய்தனர். பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காளி வேடம் அணிந்த பக்தர் ஒருவர் ஊர்வலமாக ஆடி வந்தார். மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை எடுத்தும் வழிபாடு செய்தனர். காத்தவராயன் சுவாமிக்கும், ஆரியமாலை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
தேரோட்டம்
தேரோட்டத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் நல்லதம்பி எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் சாத்தப்பாடி மணி, கோவிந்தம்பாளையம் ஊராட்சி தலைவர் விஜயா ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ேமளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்து இரவு 7 மணிக்கு நிலையை அடைந்தது. கோவிந்தம்பாளையம், பள்ளிபாளையம், புலியங்குறிச்சி, ஆரகலூர், சித்தேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் திரண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு வாண வேடிக்கையுடன் கரகாட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு ஆடு, கோழி, பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.