தென்காசி
மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா
|வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன், பத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழா நாட்களில் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீமன் பாலகிருஷ்ண சுவாமிக்கு தீபாராதனை, ஸ்ரீமன் பாலகிருஷ்ண சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா, அம்மன் உள்பிரகாரம் சுற்றி வருதல், சக்தி விநாயகர் கோவிலில் கணபதி ஹோமம், சக்தி விநாயகருக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை, குற்றாலம் சென்று தீர்த்தம் எடுத்தல், பத்திரகாளி அம்மன் அழைப்பு, அக்னி சட்டி எடுத்தல், மாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா, காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை, மாரியம்மன் கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபாடு, மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட ரிஷபவனத்தில் வீதி உலா, மாவிளக்கு எடுத்தல், பத்திரகாளி அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் முளைப்பாரியுடன் ரத வீதியுலா நடைபெற்றது. 9-ம் திருநாளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சார்பில் தலைவர் காசிராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.