நாமக்கல்
ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடக்கம்
|ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா தொடங்கியது.
ராசிபுரம்:
ராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
தேர்த்திருவிழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பழமைவாய்ந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எப்போதும் கம்பம் நடப்பட்டு இருக்கும். இதனால் அம்மன் நித்திய சுமங்கலி மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. கோவிலில் ஐப்பசி தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்தாண்டு தேர்த்திருவிழா பூச்சாற்றுதலுடன் தொடங்கியது. இதையொட்டி சிவன் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை வழங்கி வணங்கினர். சுமார் 1 டன் அளவுக்கு பக்தர்கள், மண்டப கட்டளைதாரர்கள் அளித்த பூக்களால் அம்மன் மலர் குவியலுக்குள் இருந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் இன்று (வியாழக்கிழமை) இரவு கம்பம் நடுதலும், இரவு 10 மணிக்கு குழந்தை வரம் வேண்டுவோருக்கு தயிர் சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நவம்பர் மாதம் 6-ந் தேதி இரவு பூவோடு பற்ற வைத்தல், அதிகாலை 5 மணிக்கு பூவோடு எடுத்தல் நடக்கிறது.
சத்தாபரணம்
இதை தொடர்ந்து 7-ந் தேதி இரவு கொடியேற்று விழாவும், 8-ந் தேதி காலை செல்லாண்டி அம்மன் கோவிலில் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு அக்னி குண்டம் பற்ற வைத்தலும், 9-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அக்னி குண்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
இதையடுத்து அன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 10-ந் தேதி வண்டி வேடிக்கையும், 11-ந் தேதி இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் ஊர்வலம், சத்தாபரணம் நடைபெறுகிறது. தினந்தோறும் கட்டளைதாரர்கள் சார்பில் அம்மன் ஊர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நந்தகுமார், தக்கார் கீதாமணி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.