< Back
மாநில செய்திகள்
மாரியம்மன், அய்யனார், ஆயிரவள்ளி அம்மன் கோவில் தேரோட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாரியம்மன், அய்யனார், ஆயிரவள்ளி அம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
13 July 2022 5:58 PM GMT

குன்னம் கிராமத்தில் மாரியம்மன், அய்யனார், ஆயிரவள்ளி அம்மன் கோவில் தேரோட்டம் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன், அய்யனார், ஆயிரவள்ளி அம்மன் கோவில் தேர் திருவிழா 14 ஆண்டுகள் கழித்து நேற்று நடைபெற்றது. இதையொட்டி 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் சீரமைக்கப்பட்டது.

இதையொட்டி கடந்த 3-ந் தேதி மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 4-ந்தேதி அய்யனார் சுவாமிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 5-ந் தேதி ஆயிரவள்ளி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

5-ந்தேதி மண்டகப்படியும், புஷ்ப அலங்காரமும், சாமி- அம்பாள் திருவீதி உலாவும், கரகாட்டமும், வாண வேடிக்கையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 6-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை சுவாமிக்கு புஷ்ப அலங்காரமும், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது. 10-ந் தேதி மாரியம்மனுக்கு ஊரணி பொங்கல் விழாவும், 11-ந் தேதி அய்யனார் சுவாமிக்கு ஊரணி பொங்கல் விழாவும், 12-ந் தேதி ஆயிரவள்ளி அம்மனுக்கு ஊரணி பொங்கல் விழாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் குன்னம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் குன்னம் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. பின்னர் இரவு இன்னிசை நிகழ்ச்சியும், வாண வேடிக்கையும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் சுவாமி திருவீதியுலாவும், மஞ்சள் நீர் விளையாட்டு மற்றும் காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து விடையாத்தி மண்டகப்படியும் நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்