மதுரை
ஓரம்கட்டப்பட்ட பழுதான பேட்டரி வாகனங்கள்
|மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி, திருநகர் பகுதியில் பேட்டரி இல்லாமல் பேட்டரி வாகனங்கள் ஓரம் கட்டப்பட்டு உள்ளன. அதனால் மேடான குடியிருப்பு பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
திருப்பரங்குன்றம்,
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி, திருநகர் பகுதியில் பேட்டரி இல்லாமல் பேட்டரி வாகனங்கள் ஓரம் கட்டப்பட்டு உள்ளன. அதனால் மேடான குடியிருப்பு பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
பேட்டரி வாகனங்கள்
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் 21 வார்டுகள் அமைந்து உள்ளன. அதில் ஹார்விப்பட்டி மற்றும் திருநகர் ஆனது மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதற்கு முன்பு வரை பேரூராட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வந்தது. இதேபோல சிறப்பு நிலை நகராட்சியாக திருப்பரங்குன்றம் இருந்தது.
அப்போது இந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் சேரக்கூடிய குப்பைகளை உடனுக்கு உடன் அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு சுகாதாரம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் சிறு, குறு தெருக்களில் சென்று வந்த பேட்டரி வாகனங்களில் பேட்டரி பழுதாகி ஓரங்கட்டப்பட்டுள்ளன. அதேபோல, டிரை சைக்கிள்களில் பெரும்பாலானவை பழுதாகி குப்பையாகி கிடக்கிறது.
இந்த நிலையிலும் தூய்மை பணியாளர்கள் ஒருசில பேட்டரி வண்டிகளை இயக்கி தெருக்களில் இருந்து குப்பைகளை அள்ளி வரும்போது பேட்டரி பழுதாகி பாதியிலேயே வண்டி நின்றுவிடுகிறது. அதை தள்ளுவண்டி போல இழுத்து பயன்படுவதில் தூய்மை பணியாளர்கள் அவதிப்படுகின்றனர்.
சுகாதாரம் கேள்விக்குறி
பேட்டரி, சார்ஜர், இல்லாமல் செயலிழந்து பேட்டரி வாகனங்கள் ஓரமாக நிறுத்தப்பட்டு பல மாதங்களாகியும் அதைசரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. .இதே நிலை நீடித்தால் மழையில் நனைந்து நாளடைவில் துருபிடித்து எதற்கும் பயன்படாமல் போய்விடும்.
பேட்டரி வாகனங்கள் பழதாகி.போனதால் மேடான பகுதிகள், சிறு, குறு தெருக்களில் குப்பைகள் உடனுக்கு உடன் அகற்றப்படாத நிலையில் சுகாதாரம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதற்கிடையில் குப்பை டப்பாக்களை எடுத்து செல்லக்கூடிய வாகனங்களும் பழுதாகி தள்ளுவண்டி மாடலாக உருமாறி வருகிறது.
இது தொடர்பாக தூய்மை பணியாளர் ஒருவர் கூறும்போது, பேட்டரி வண்டி பழுதான போதிலும் அதை உடனடியாக சரிசெய்வதில்லை. பேட்டரி வாகனங்களுக்கு கிரேன் ஆயில் கூட ஊற்றுவதில்லை. ஹாரன் கூட அடிப்பதில்லை. பார்ப்பதற்கு புதிய வண்டி மாதிரி இருக்கிறது. அதை இயக்கினால் திடீர் திடீரென்று ஆப் ஆகி விடுகிறது. அதனால் மேடான பகுதி, சிறிய குறுகிய தெருக்களில் குப்பை சேகரித்து கொண்டு வருவதில் மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் புதிய பேட்டரி வாகனங்கள், புதிய டிரை சைக்கிள்கள் வேண்டும் என்றார்.