பெரம்பலூர்
கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு தொடக்கம்
|கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடந்தது.
அதிகாலையில் நடை திறப்பு
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பெருமாள் மற்றும் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாட்டிற்காக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி பெரம்பலூரில் உள்ள பஞ்ச பாண்டவர் வழிபட்ட பெருமைபெற்ற மரகதவல்லித்தயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதனை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதேபோல் மரகதவல்லித்தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜைகளை கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன் நடத்தினார். இதில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
பிரகார உலா
கோவிலில் திருப்பாவை பாசுரங்கள் ஒலிபரப்பப்பட்டன. பஞ்ச பாண்டவர் சன்னதியில் ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இளம்பெண்கள் பலர் ஆண்டாளை வழிபட்டு பாவை நோன்பை தொடங்கினர். இரவில் உற்சவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனையும், பிறகு பல்லக்கில் பிரகார உலாவும் நடந்தது.இதேபோல் பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று மூலவருக்கு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதனை முன்னிட்டு நடந்த கோபூஜை மற்றும் சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் மற்றும் முல்லை சிவாச்சாரியார் நடத்தினர். பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் திருவெம்பாவை மற்றும் சிவபுராணங்களை பாராயணம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
மேலும் பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவில், வடக்குமாதவி சாலையில் உள்ள சவுபாக்கிய விநாயகர் கோவில் மற்றும் தெப்பக்குளம் கரையில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதேபோல் குரும்பலூரில் உள்ள தர்ம சம்வர்த்தனி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் அதிகாலையில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.