< Back
மாநில செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா
கடலூர்
மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா

தினத்தந்தி
|
29 Dec 2022 1:55 AM IST

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிதம்பரம்,

மார்கழி ஆருத்ரா தரிசனம்

சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த இரு விழாக்களின் போதும், மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

கொடியேற்றம்

அதை தொடர்ந்து நடராஜர் சன்னதியில் பூஜை செய்யப்பட்ட கொடியை கொடிமரத்துக்கு தீட்சிதர்கள் எடுத்து வந்தனர். அங்கு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் முன்னிலையில் காலை 7.25 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க உற்சவர் ஆச்சாரியார் நடராஜகுஞ்சிதபாத தீட்சிதர், விழா கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினசரி காலை, மாலையில் பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் வருகிற 1-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 5-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

சிகர திருவிழாவான 6-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.

அன்றய தினம் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சாமியும், அம்பாளும் சிற்சபைக்கு எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

தெப்ப உற்சவம்

7-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 8-ந் தேதி இரவு ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேம சபேசன் தீட்சிதர், துணை செயலாளர் சேது அப்பா செல்ல தீட்சிதர் மற்றும் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்