திருவண்ணாமலை
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் ஓட்டம்
|திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் ஓட்டம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.
இந்த மாரத்தான் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட மேலாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஐ.சி.டி.சி. மேற்பார்வையாளர் வி.முருகானந்தம், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி கலந்து கொண்டு கொடியசைத்து மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டத்தை தனித்தனியாக தொடங்கி வைத்தார்.
இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் ஓட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவண்ணாமலை காஞ்சி சாலை கிரிவலப்பாதையில் அபயமண்டபம் அருகில் நிறைவடைந்தது.
இதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் இதில் வெற்றி பெற்றவர்கள் மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.