< Back
மாநில செய்திகள்
மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

'மாபெரும் தமிழ்க்கனவு' நிகழ்ச்சி

தினத்தந்தி
|
14 Oct 2023 12:15 AM IST

மயிலாடுதுறையில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

தமிழ்க்கனவு நிகழ்ச்சி

மயிலாடுதுறை ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் "கற்க கசடற" என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் கரு.ஆறுமுகத் தமிழன் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் 'மாபெரும் தமிழ்க் கனவு' என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நினைவு நாளான 3.2.2023 அன்று தொடங்கப்பட்டு 24.4.2023 வரை நடந்தது.

1 லட்சம் மாணவர்கள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த 1 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. இதை உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தியது.

நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்த பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என்றார்.

வங்கிகடன் உதவி ஆலோசனை

முன்னதாக, மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தக்காட்சி, 'நான் முதல்வன்', வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடன் உதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு 'உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி', 'தமிழ்ப் பெருமிதம்' ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் 800 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். 'தமிழ்ப் பெருமிதம்' சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன.

சான்றிதழ்-பரிசு

சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி 'கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன்' எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி, தாட்கோ மேலாளர் சுகந்தி பரிமளம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துச்சாமி, ஏ.வி.சி.கல்லூரி முதல்வர் நாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்