உ.பி.யில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் பலியான சம்பவம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
|நெரிசலில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர். நெரிசலில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்து வருகின்றனர். சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் துயரம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.