சிவகங்கை
மஞ்சுவிரட்டு
|மஞ்சுவிரட்டு நடந்தது.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாபட்டு அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதையொட்டி அய்யனார் கோவிலில் கூடிய நாட்டார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திருவிழா தோரண கொடியுடன் மேளதாளம் முழங்க வேட்டி துண்டுகளுடன் ஊர்வலமாக தொழுவினை சுற்றி வந்தனர். பின்னர் மாடுகளுக்கு வேட்டி துண்டுகள் கட்டி, தொழுவிலிருந்து 60-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டது. முன்னதாக தென்மா கண்மாயில் 600-க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டு மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடித்து மகிழ்ந்தனர். திருப்பத்தூர், வாணியன்காடு, பட்டமங்கலம், மாங்குடி, காரையூர், மணக்குடி, சிங்கம்புணரி, காரைக்குடி, ஆகிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாடுகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.