< Back
மாநில செய்திகள்
ரூ.1600 கோடி முதலீட்டில் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி.. முதல்-அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்
மாநில செய்திகள்

ரூ.1600 கோடி முதலீட்டில் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி.. முதல்-அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

தினத்தந்தி
|
31 July 2023 6:26 PM IST

தமிழகத்தில் புதிய செல்போன் உபகரணம் உற்பத்திக்காக ரூ.1,600 கோடி முதலீடு செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் புதிய செல்போன் உபகரணம் உற்பத்திக்காக பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1,600 கோடி முதலீடு செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு சந்தித்து, தமிழ்நாட்டில் அந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் குறித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு, பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சைய் சியாங், பொதுமேலாளர் பாப் சென், தலைமை அலுவாக இயக்குனர் செந்தில்குமார், இந்திய பிரதிநிதி லீ, இணை மேலாளர் ஹன்னா வேங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் தனது டுவிட்டர் தளத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழிகாட்டி நிறுவனத்துடன் பாக்ஸ்கான் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டு கையெழுத்திட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1,600 கோடி செலவில் புதிய செல்போன் உபகரணங்கள் உற்பத்தி வசதியை ஏற்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் மீண்டும் மீண்டும் முதலீடு செய்வதும், விரிவாக்க திட்டத்தை செயல்படுத்துவதும், உலகத்திலேயே மிகப் பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு தமிழகத்தையே தேர்வு செய்கின்றன என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. இது தமிழகத்தின் மிகப் பெரிய சாதனையாகும்.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நல்ல வெற்றியை கண்டு வரும் உற்பத்தியாளர்களுக்கு, தமிழகத்தில் அதிக முதலீடு செய்தால்தான் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என்பது தெரியும். இது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது உலக முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் செய்யப்படவுள்ள இந்த முதலீடும், இன்னும் வரவுள்ள முதலீடுகளும், இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருள் ஏற்றுமதியில் முன்னிலையில் தமிழகம் உள்ளது என்பதை மட்டுமல்லாமல், வரும் ஆண்டுகளில் அதன் ஏற்றுமதியை பெருமளவில் உயர்த்த முடியும் என்பதையும் காட்டுகிறது. இது, தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் நோக்கத்தை அடைவதில் முக்கிய பங்காற்றும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்