விருதுநகர்
குடியிருப்பு பகுதியில் பட்டாசு உற்பத்தி
|திருத்தங்கலில் குடியிருப்பு பகுதியில் பட்டாசு உற்பத்தியை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி,
திருத்தங்கலில் குடியிருப்பு பகுதியில் பட்டாசு உற்பத்தியை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 பேர் கைது
விருதுநகர் மாவட்டத்தில் 800-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில் சிலர் உரிய அனுமதி பெறாமல் வீடுகளில் பட்டாசுகள் தயாரித்து வருவது தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருத்தங்கல் பகுதியில் கடந்த காலங்களை விட அதிக அளவில் தற்போது வீடுகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.
பட்டாசு தயாரிக்க தேவைப்படும் பொருட்களை அனுமதியின்றி கொண்டு செல்லும் போது போலீசாரின் சோதனையில் பிடிப்பட்டு வருவதால் இது அம்பலமாகி உள்ளது. திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கையின் மூலம் அனுமதியின்றி மூலப் பொருட்கள் கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியிருப்புகளில் பட்டாசுகள்
இந்தநிலையில் திருத்தங்கல் கலைஞர் கருணாநிதி காலனியில் கூல்சாமி என்பவரின் மகன் பெரியசாமி (வயது 27) என்பவர் தனது வீட்டின் அருகில் தகர செட் அமைத்து அதில் பட்டாசுகள் தயாரித்து வந்தது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து குழாய்கள் மற்றும் திரிகளை பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை மூலம் குடியிருப்பு பகுதியில் பட்டாசு தயாரிப்பது அம்பலமாகி உள்ளது. இதனை முற்றிலுமாக தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.