விருதுநகர்
சீல் வைக்கப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி
|சிவகாசி அருகே சீல் வைக்கப்பட்ட ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிவகாசி அருகே உள்ள கீழத்திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலகம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செங்கமலப்பட்டி- வடமலாபுரம் சாலை உள்ளது. இங்கு ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலை விதிமீறல் காரணமாக வருவாய்த்துறையினரால் சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த பட்டாசு ஆலையில் விதிமுறைகளை மீறி பட்டாசு உற்பத்தி நடைபெறுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கீழ திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் சங்கிலிபிரபு மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பட்டாசு ஆலையில் சில தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கிலி பிரபு சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ஆலையின் உரிமையாளர் ராமலட்சுமி, பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட முத்துக்குமார் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.