மதுரை
பிரபல நடிகர்களின் சினிமா வெளிவரும் போது சிறப்பு காட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் கோரி மனு- மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
|பிரபல நடிகர்களின் சினிமா வெளிவரும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத அளவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிறப்புக்காட்சிகள்
மதுரை ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. குறிப்பாக, பிரபலமான நடிகர்களின் சினிமா படங்கள் தியேட்டர்களில் வெளியிடப்படுகின்றன. இதில், முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவரும் போது, ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுகின்றனர். இதற்காக சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது.
அன்றைய தினத்தில் தியேட்டர் முன்பு பட்டாசு வெடிப்பது, கூச்சல் போடுவது, கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது என பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். மது அருந்தி வாகனம் ஓட்டுவது, விபத்தை ஏற்படுத்துவது போன்ற செயல்களும் நடக்கின்றன. தியேட்டர்களின் முன்பு வைக்கப்படும் கட் அவுட்டுகள் பல நேரங்களில் கீழே விழுந்து விபத்துகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
ரசிகர்களுக்கான காட்சியின் போது சென்னையில் ஒரு ரசிகர் பரிதாபமாக உயிரிழந்தார். தியேட்டர் சேதப்படுத்தப்பட்டது. சில ரசிகர்கள் பறவை காவடி, பூ மழை, கிரேன் வாகனம் மூலம் முதுகில் அலகு குத்தி காவடி வருகின்றனர். இது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். சமீபத்தில் யூடியூபர் டி.டி.எப்.வாசன் செயலுக்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடு விதிக்க
அதாவது, இளைய தலைமுறையை பாதிப்பதுடன், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என தெரிவித்தது. தியேட்டரில் இருக்கைகள் மற்றும் பொருள்களை ரசிகர்கள் என்ற பெயரில் சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பல ஏழைக்குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் சினிமா வெளிவரும் போது ரசிகர்கள் என்ற போர்வையில் உடல்நலத்தை கெடுத்து, பெற்றோர்களுக்கும் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் சிரமங்களை கொடுத்து வருகின்றனர்.
இதேபோல் தான் ரசிகர்களின் இந்த செயல்கள் இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை கெடுத்துவிடும். அத்துடன் சிறப்புக்காட்சிகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த விவகாரத்தில் அரசின் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன.
எனவே தமிழகம் முழுவதும் பிரபல நடிகர்களின் சினிமா ரிலீஸ் செய்யப்படும் போதும், டிரெய்லர் வெளியிடும் போதும் சிறப்புக்காட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.