மாண்டஸ் புயல் எதிரொலி: சீரான மின் விநியோகம் எப்போது? - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்
|இன்று மதியத்திற்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மதியத்திற்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் கூறுகையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
புயலால் சேதம் அடைந்த மின்கம்பங்களை ஆய்வு செய்து அவற்றை சரிசெய்து அதன்பின் மின்விநியோகம் வழங்கப்படும்.இன்று மதியத்திற்குள் 100 சதவீதம் முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.