கரூர்
கரூரில் வெயிலின் தாக்கத்தை தணிக்க மண்பானை விற்பனை அமோகம்
|கரூரில் வெயிலின் தாக்கத்தை தணிக்க மண்பானை விற்பனை அமோகமாக நடக்கிறது.
கரூர்,
வெயிலின் தாக்கம்
கரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வந்தது. இந்தநிலையில் இந்தாண்டு மார்ச் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்ததன் மூலம் வெயிலின் தாக்கம் அவ்வபோது சற்று குறைந்து காணப்பட்டாலும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.இதனால் பொதுமக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரி உள்ளிட்ட உடலை குளிர்ச்சியூட்டும் பொருட்களை அதிக அளவில் வாங்கி உண்பதை காணமுடிகிறது. இவ்வாறு பல வகைகளை வாங்கி சாப்பிடுவது ஒரு பக்கம் இருந்தாலும் மண்பானையில் நீர் ஊற்றி வைத்து அந்த நீரை குடித்து வருவது உடல் நலத்திற்கு நல்லது என்பதுடன் தாகம் தீர்க்கும் என்பதால் தற்போது மண்பாண்ட பொருட்களை வாங்குவதில் பொது மக்கள் ஆர்வம் காட்டி வருவதை காண முடிகிறது.
தாகம் தணியும்
முன்பு எல்லாம் கிராமங்களில் மண் சட்டியில் சமையல் செய்து சாப்பிட்டு, மண்பானையில் நீர் ஊற்றி வைத்து அதை குடித்து வந்தனர். தற்போது வேலைப்பளுவின் காரணமாக கிராமங்களில் கூட அதிக அளவில் பிரிட்ஜ் பயன்படுத்துவோர் அதிகரித்து, மண்பாண்டத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.இந்தநிலையில் வெயிலின் தாக்கத்தை தீர்க்க மண்பானையில் நீரை ஊற்றி வைத்து குடித்தால் தாகம் தணியும் என்பதால் தற்போது மண்பானையின் விற்பனை அதிகரித்து உள்ளது.
பல்வேறு வடிவங்கள்
கரூர் தாலுகா அலுவலகம் அருகில் மண்பானைகள் வைத்து விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறுகையில், மண்பானையில் பைப் வைத்து விற்கப்படும் பானை, சின்னபானை, டம்ளர், வாட்டர் கேன், கருப்பு சட்டி, வடசட்டி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் விளையாடி மகிழ அடுப்பு, அம்மிக்கல், தோசைக்கல், உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுகிறது.இதில் பைப் வைத்த பானைகள் 10 லிட்டர், 12 லிட்டர், 20 லிட்டர் என வெவ்வேறு வடிவங்களில் தாயரிக்கப்பட்டு ரூ.300 முதல், ரூ.500 வரையும், பைப் இல்லாமல் உள்ள மண்பானைகள் ரூ.250 முதல் ரூ.350 வரையும், வாட்டர் கேன் ரூ.300-க்கும், கருப்பு சட்டி ரூ.230-க்கும் என்ற விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். என்றார்.