தேனி
மணிப்பூர் சம்பவம் எதிரொலி:பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம்
|மணிப்பூர் சம்பவம் எதிரொலியாக, பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மணிமாறன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் (பொறுப்பு) குலோத்துங்கன் வரவேற்றார். கூட்டத்தில், பேரூராட்சி வளர்ச்சி பணிகள், செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தின் போது, பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி ஒரு சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதன்படி, மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இரு குழுவினருக்கு இடையே நடந்து வரும் கலவரத்தால் பொருட்சேதம், உயிர்ச்சேதம் மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருவதை தடுக்கத் தவறிய மணிப்பூர் மாநில அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூரில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசை கண்டிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மக்களின் சார்பில் மணிப்பூர் மக்களுக்கு ஆறுதலும், ஆதரவும் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.