நாமக்கல்
மகளிர் சுயஉதவி குழுவினர் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
|நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த முறையில் செயல்படும் மகளிர் சுயஉதவி குழுவினர் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
மணிமேகலை விருது
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சிறந்த சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர் புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவைகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டு, ரூ.2 கோடியே 10 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்து உள்ளது.
சுய உதவிக்குழுக்களை பொறுத்த வரையில் ஏ மற்றும் பி தர மதிப்பீடு உடையதாக இருக்க வேண்டும். சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு, குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். வங்கி கடன் குறைந்தபட்சம் 3 முறை பெற்று முறையாக திருப்பி செலுத்தியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 அலுவலக நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்திருக்கவேண்டும்.
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு
சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்காக விருது பெற ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஏ மற்றும் பி தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். சிறந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கம் இந்த விருது பெற ஏ மற்றும் பி தரமதிப்பீடு பெற்றிருக்கவேண்டும்.
சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு இவ்விருதை பெற ஏ மற்றும் பி தரமதிப்பீடு பெற்றிருக்கவேண்டும். வட்டார அளவிலான கூட்டமைப்பு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும். கடந்த ஓராண்டில் வட்டார அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 10 கூட்டங்களாவது நடந்திருக்க வேண்டும்.
சிறந்த பகுதி அளவிலான கூட்டமைப்பு இவ்விருது பெற ஏ மற்றும் பி தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். பகுதி அளவிலான கூட்டமைப்பு தொடங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்து சுயஉதவிக்குழுக்களும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைந்திருக்கவேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் பகுதிஅளவிலான கூட்டமைப்பில் குறைந்தபட்சம் 20 கூட்டங்கள் நடத்த பெற்றிருக்க வேண்டும்.
25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சிறந்த நகர அளவிலான கூட்டமைப்பிற்கான விருது பெற நகர அளவிலான கூட்டமைப்பு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் ஒரு வருடம் முடிந்திருக்க வேண்டும். அனைத்து பகுதி அளவிலான கூட்டமைப்புகளும், நகர அளவிலான கூட்டமைப்புடன் இணைந்திருக்க வேண்டும். நகர அளவிலான கூட்டமைப்பு கடந்த 1 ஆண்டில் குறைந்த பட்சம் 10 கூட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும்.
எனவே, 2022-2023-ம் ஆண்டுக்கு விருதிற்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதை பெற வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை வட்டார இயக்க மேலாண்மை அலகில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.