தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில்காற்றுடன் மழைக்கு மரங்களில் மாங்காய்கள் உதிர்வுவிவசாயிகள் கவலை
|பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டத்தில் காற்றுடன் பெய்து வரும் மழையால் மரங்களில் இருந்து மாங்காய்கள் உதிர்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மா சாகுபடி
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மா சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள மா மரங்களில் இருந்து அதிகளவில் பூக்கள் பூத்ததுடன் பிஞ்சுகள் காய் பிடித்துள்ளன.
இதற்கிடையே கடந்த சில தினங்களாக தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மா மரங்களில் இருந்து மாங்காய்கள் அதிகளவில் உதிர்ந்து வருகின்றன.
விவசாயிகள் கவலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தர்மபுரி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மாமரங்களில் இருந்து அதிகளவில் பிஞ்சுகள், மாங்காய்கள் உதிர்ந்தன. இந்த மழை மேலும் 4 நாள் தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் தர்மபுரி மாவட்ட மா விவசாயிகள் கவலை அடைந்தள்ளனர். கோடை மழை, காற்றால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.