< Back
மாநில செய்திகள்
மாங்காய் விளைச்சல் பாதிப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

மாங்காய் விளைச்சல் பாதிப்பு

தினத்தந்தி
|
18 April 2023 12:45 AM IST

ராஜபாளையம் பகுதியில் பருவநிலை மாற்றம், புழு தாக்குதலால் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் பகுதியில் பருவநிலை மாற்றம், புழு தாக்குதலால் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மா சாகுபடி

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கல்லாத்து காடு, புரசம்பாறை, அனத்தலை, செண்பகத்தோப்பு, அய்யனார் கோவில், முடங்கியாறு, சுந்தரராஜபுரம், சேத்தூர், தேவதானம், கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் சப்பட்டை, பஞ்சவர்ணம், கிளிமூக்கு, காசாலட்டு உள்ளிட்ட பழங்களின் சுவை சற்று அதிகமாக இருக்கும். மாசி, பங்குனி மாதங்களில் பூ பூத்து, சித்திரை மாதம் மாவடு வளர்ந்து, வைகாசி முதல் மழையை பொறுத்து தொடர்ந்து 4 மாதங்களுக்கும் மாம்பழ சீசன் இருப்பது வழக்கம்.

4 ஆயிரம் டன் மகசூல்

4 மாதங்களில் ஏக்கர் ஒன்றுக்கு 4 டன் வரை மாங்காய்கள் அறுவடை செய்யலாம் என விவசாயிகள் தெரிவித்தனர். ஒரு சீசனுக்கு 4 ஆயிரம் டன் வரை ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாம்பழ விளைச்சல் இருக்கும்.

இதுகுறித்து ராஜபாளையத்தை ேசர்ந்த விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது:-

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதானமாக மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவம் தவறி இந்த வருடம் மார்கழி மாதமே மழை பெய்ததால் முதல் பட்டத்தில், எதிர்பார்த்ததை விட மரங்களில் அதிகமான பூக்கள் பூத்திருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

விளைச்சல் பாதிப்பு

ஆனால் அந்த சமயத்தில் புழு தாக்குதல் ஏற்பட்டதால் பல பகுதிகளில் பூக்கள் உதிர்ந்து விட்டது. இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் பூச்சி மருந்து அடித்தனர். ஆனால் எந்த வித பலனும் ஏற்படவில்லை.

இதற்கிடையே பருவநிலை மாற்றம் காரணமாக பூக்கள் காயாக மாற்றம் அடையவில்லை. பல பகுதிகளில் வடுவாக இருந்த போதே உதிர்ந்து விட்டது. மேலும் கடந்த ஒரு மாதமாக அதிகமான வெயில் மற்றும் திடீரென கோடை மழை பெய்து வருவதால் பூக்கள் உதிர்ந்து வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக பல மரங்களில் பூக்கள் கருகிய நிலையில் காணப்படுகிறது. அதையும் மீறி வடுக்கள் வைத்தாலும் வளர்ச்சி இன்மையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கவலை

ஒரு சில இடங்களில் மட்டும் புழு தாக்குதல் இல்லாததால் மாங்காய்கள் நன்றாக விளைந்துள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு புழு மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இ்வ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்