காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் 'மாண்டஸ்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாநகராட்சி மேயர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
|‘மாண்டஸ்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
'மாண்டஸ்' புயல்
வங்க கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தமானது 'மாண்டஸ்' புயலாக உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த 5ஆ-ந் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்து பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 8 மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் நாளை(வெள்ளிக்கிழமை) அதீத கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
இதைத்தொடர்ந்து நேற்று காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் 'மாண்டஸ்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை, சுகாதார துறை, மின்சாரத் துறை, காவல் துறை, தீயனைப்பு துறை, உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு பேசுகையில், மாண்டஸ் புயல் உருவாகுவதால் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால், சாயும் தருவாயில் உள்ள பழமையான மரங்கள், மின்கம்பிகள் அருகில் உள்ள மரங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும்.
கட்டணமில்லா தொலைபேசி எண்
சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் காற்றினால் கீழே விழும் பாதிப்பு உள்ளதால் அதனை அகற்றவும், குடிசை மற்றும் இடியும் தருவாயில் உள்ள கட்டிடங்களில் தங்கும் மக்களை பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கவும், மின் அழுத்ததால் கால்நடைகள் உயிரிழக்காமல் இருக்க மின்கம்பங்களில் முனைய பெட்டி பொருத்தப்பட்டுள்ளதைக் குறித்தும் அனைத்துத்துறை அதிகாரிகளிடம் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் பேரிடர் காலத்தில் மாநகராட்சியை தொடர்பு கொள்ள 24 மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசி எண் உபயோகத்தில் இருக்கும், எந்த நேரத்திலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன், மண்டல குழு தலைவர்கள், அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.