காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க உத்தரவிட வேண்டும் - பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
|காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க உத்தரவிட வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ரத்தினகுமார் மற்றும் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1,545 அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்தமைக்காக தமிழக முதல்-அமைச்சருக்கு சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் குழந்தைகளுக்கு கண்பார்வைக்கும், எலும்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கும், அறிவு கூர்மைக்கும் பால் பிரதானமாக உணவாகும். எனவே காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் ஒரு டம்ளர் பாலை மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு வழங்கினால் மாணவர்களும் ஊட்டச்சத்தை பெறுவார்கள். விவசாயிகளும் பயனடைவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.