< Back
மாநில செய்திகள்
மண்டபம் கடல் பகுதியில் கரை ஒதுங்கி கிடக்கும் பாசிகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மண்டபம் கடல் பகுதியில் கரை ஒதுங்கி கிடக்கும் பாசிகள்

தினத்தந்தி
|
4 Oct 2023 12:15 AM IST

பலத்த சூறைக்காற்றால் மண்டபம் முதல் தாமரைக்குளம் வரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதியில் பாசிகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன.

பனைக்குளம்,

கடல் சீற்றம்

பாம்பன் குந்துகால் அருகே உள்ள சிங்கலி தீவு, குருசடைதீவு தீவு முதல் தூத்துக்குடி இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதி வரையிலும் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றிய கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், ஆமை, சுறா மீன், திமிங்கலம் உள்ளிட்ட 3600 வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதை தவிர இயற்கையாகவே தீவை சுற்றிய கடல் பகுதியில் பல வகையான பாசிகளும், இயற்கை தாவரங்களும் வளர்ந்து நிற்கின்றன.

இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. மேலும் கடலும் சீற்றமாக உள்ளது.

கரை ஒதுங்கிய பாசிகள்

இதனிடையே கடல் சீற்றம் மற்றும் பலத்த சூறாவளி காற்று காரணமாக மன்னார்வளைகுடா பகுதியை சுற்றி உள்ள கடல் பகுதிகளில் வளர்ந்து நிற்கும் பாசி செடிகள் மற்றும் தாழை செடிகளும் கடல் நீரோட்டம், காற்றின் வேகத்தால் மண்டபம் தெற்கு கடற்கரை முதல் மரக்காயர்பட்டினம், வேதாளை, சீனியப்பா தர்கா, மானாங்குடி புதுமடம், தாமரைக்குளம் வரையிலான கடற்கரை பகுதி முழுவதும் பாசி செடிகளும் தாழை செடிகளும் கரை ஒதுங்கி கிடக்கின்றன.

குறிப்பாக மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் பாசி மற்றும் தாழை செடிகள் குவியல், குவியலாக மலை போல் கரை ஒதுங்கி கிடக்கின்றன.

கடல் நீரோட்டம்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறும்போது, ஆண்டு தோறும் செப்டம்பர் மாதங்களில் பலத்த சூறைக்காற்று வீசும். மேலும் கடலும் சீற்றமாகவே காணப்படும். இந்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தீவை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இருந்து பாசி மற்றும் தாழை செடிகள் பெயர்ந்துவிடும்.

இந்த பாசி, தாழை செடிகள் கடல் நீரோட்டம் காரணமாக கடற்கரை பகுதியில் கரை ஒதுங்குதுவது வழக்கமான ஒன்றுதான். இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் செய்திகள்