கன்னியாகுமரி
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்மாசி கொடை விழா கொடியேற்றம்
|மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி கொடை விழா கொடியேற்றம் நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி கொடை விழா கொடியேற்றம் நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் 'பெண்களின் சபரிமலை' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் மாசிக்கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டின் மாசிக்கொடை விழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை ஆகியவை நடந்தன. அதைத்தொடர்ந்து காலை 8.23 மணிக்கு கொடியை கோவில் தந்திரி சங்கர நாராயணன் ஏற்றினார்.
இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய்வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன், தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், தேவசம் மண்டல இணை ஆணையர் கவிதா பிரிய தர்சினி, குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர், கோவில் மேலாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், பேரூராட்சி தலைவர்கள் ராணிஜெயந்தி, பாலசுப்பிரமணியன், குட்டிராஜன், செயல் அலுவலர் கலாராணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமய மாநாடு
அதைத்தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 86-வது இந்து சமய மாநாடு கொடியேற்றம் நடந்தது. தலைவர் கந்தப்பன் தலைமையில் மாநாடு தொடங்கியது. மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விஜய்வசந்த் எம்.பி., கேரள முன்னாள் மந்திரி சிவகுமார், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் டாக்டர் தெய்வபிரகாஷ் ஆகியோர் பேசினர். குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர், தேவசம் கண்காணிப்பளர் ஆனந்த், கோவில் ஸ்ரீ காரியம் செந்தில்குமார், மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிந்துகுமார், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சிவகுமார், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
9 ஆயிரம் திருவிளக்கு பூஜை
பகல் 12 மணிக்கு கருமன்கூடல் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு சீர் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து அன்னை பகவதி அன்னதான குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலாவும், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜையும் நடந்தது. இரவு 8 மணிமுதல் பரத நாட்டியம் நிகழ்ச்சி, 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெற்றது.