சிவகங்கை
கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு
|நெற்குப்பை பரியாமருதுபட்டி சேவுகப்பெருமாள் கோவிலில் ஆனி உற்சவத்தை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
திருப்பத்தூர்,
நெற்குப்பை பரியாமருதுபட்டி சேவுகப்பெருமாள் கோவிலில் ஆனி உற்சவத்தை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பரியமருதுபட்டி பூரண புஷ்கலா சமேத சேவுகப்பெருமாள் கோவிலில் ஆனி உற்சவ விழா கடந்த 22-ந் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. நேற்றுமுன்தினம் 9-ம் திருநாளாக தேரோட்டம் நடைபெற்றது. இந்த கோவில் திருவிழாவையொட்டி நேற்று பரியாமருதுப்பட்டி கண்மாய் பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் நெற்குப்பை, பொன்னமராவதி, புதுக்கோட்டை, வார்பட்டு, வேந்தன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன.
இதை தொடர்ந்து காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது. முன்னதாக நெற்குப்பை கீழத்தெரு, வடக்கு தெரு நாட்டார்கள் சேவுகமூர்த்தி கோவிலில் இருந்து ஜவுளி எடுத்து கொண்டு ஊர்வலமாக மஞ்சுவிரட்டு தொழுவிற்கு வந்தனர்.
10 பேர் காயம்
அங்கு மஞ்சுவிரட்டில் கலந்து கொண்ட காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டு போட்டி நடைபெற்றது. அப்போது மைதானத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தனர். போட்டியின்போது காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் நெற்குப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பொன்னமராவதி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றனர்.
இந்த மஞ்சுவிரட்டை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.