சிவகங்கை
கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு
|திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.
மஞ்சு விரட்டு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெடுமறம் கிராமத்தில் உள்ள மலையரசியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நெடுமறம், சில்லாம்பட்டி, ஊர்க்குளத்தான்பட்டி, உடையநாதபுரம் மற்றும் என்.புதூர் ஆகிய 5 கிராமத்தில் உள்ள நாட்டார்களால் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இதையடுத்து இந்தாண்டு மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது.
தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன், தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தொழுவில் 115 மாடுகள் பதிவு செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது.
20 பேர் காயம்
மேலும் இந்த மாட்டை அடக்குவதற்காக 51 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்க முயன்றனர். முன்னதாக மலையரசியம்மன் கோவிலில் இருந்து 5 ஊர் நாட்டார்கள் சார்பில் கோவில் காளையுடன் ஊர்வலமாக வந்து தொழுவிற்கு வந்தனர். மேலும் நேற்று காலை கட்டுமாடுகளாக நெடுமறம் வயல்வெளி மற்றும் சில்லாம்பட்டி கண்மாய் பகுதியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. இதையடுத்து அங்கு திரண்டிருந்தவர்கள் காளைகளை அடக்க முயன்றனர். இதில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.