< Back
மாநில செய்திகள்
புரவி எடுப்பு விழாவையொட்டி மஞ்சுவிரட்டு
சிவகங்கை
மாநில செய்திகள்

புரவி எடுப்பு விழாவையொட்டி மஞ்சுவிரட்டு

தினத்தந்தி
|
5 July 2023 12:15 AM IST

பிரான்மலையில் புரவி எடுப்பு விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடந்தது. இந்த போட்டி அனுமதியின்றி நடத்தியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கம்புணரி,

பிரான்மலையில் புரவி எடுப்பு விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடந்தது. இந்த போட்டி அனுமதியின்றி நடத்தியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான் மலையில் உள்ள கலியுக மெய் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கோபாலபச்சேரி கிராமத்தில் மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது. முன்னதாக கிராமத்தார்கள், முக்கியஸ்தர்கள் கோவிலில் இருந்து மஞ்சுவிரட்டு திடலுக்கு ஊர்வலமாக சென்று தொழுவம் வந்தடைந்தனர். தொழுவத்தில் அடைக்கப்பட்ட கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மஞ்சுவிரட்டு தொழுவத்தில் இருந்து கோவில் காளை முதல் காளையாக அவிழ்த்து விடப்பட்டது.

அதன் பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட காளைகள் திடலிலும் மற்றும் வயல்வெளி பகுதிகளிலும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது மைதானத்தில் காளைகள் ஆக்ரோஷமாக துள்ளி குதித்தும், சீறி பாய்ந்தபடியும் சென்றன.

5 பேர் மீது வழக்கு

இந்த காளைகளை அங்கு திரண்டிருந்த வாலிபர்களும், மாடு பிடி வீரர்களும் பிடிக்க முயன்றனர். அதில் சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடாமல் சென்றன.

இந்த மஞ்சுவிரட்டை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். மேலும் போட்டியின்போது பார்வையாளர்களை மாடு முட்டியதில் 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. மேலும் இந்த மஞ்சுவிரட்டு போட்டி அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக கூறி 5 பேர் மீது எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்