< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் கோலாகலம்:மலைக்குன்று முழுவதும் அமர்ந்துமஞ்சுவிரட்டை ரசித்த மக்கள் மாடு முட்டி ஒருவர் பலி; 63 பேர் காயம்

தினத்தந்தி
|
7 March 2023 12:15 AM IST

சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் கோலாகலமாக மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது. மலைக்குன்று முழுவதும் அமர்ந்து இந்த விழாவை மக்கள் பார்த்து ரசித்தனர். மாடு முட்டி ஒருவர் பலியானார். 63 பேர் காயம் அடைந்தனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் கோலாகலமாக மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது. மலைக்குன்று முழுவதும் அமர்ந்து இந்த விழாவை மக்கள் பார்த்து ரசித்தனர். மாடு முட்டி ஒருவர் பலியானார். 63 பேர் காயம் அடைந்தனர்.

அரளிப்பாறை மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை கிராமத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டு விழாவானது பிரசித்தி பெற்றது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கு இந்த விழா மாசி மாதத்தில் நடைபெற்று வருகிறது.

அரளிப்பாறை மலைக்குன்றின் மீதுள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மக திருவிழா 10 நாட்கள் நடைபெறும். 10-ம் விழா நாளில் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியாக மாசி மகத்தையொட்டி நேற்று பிரசித்தி பெற்ற மஞ்சுவிரட்டு கோலாகலமாக நடைபெற்றது.

சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் என 5 மாவட்ட எல்லைப்பகுதியில் அரளிப்பாறை கிராமம் அமைந்துள்ளது. 5 நிலை நாடு அரளிப்பாறை எனவும் மக்களால் அழைக்கப்படுகிறது.கேரள சிங்க வளநாடு மற்றும் 5 நிலை நாட்டார்கள் (ஐந்து மங்கள தலைவர்கள்) தலைமையில் இந்த விழா நடைபெற்றது.

போட்டிப்போட்டு அடக்கினர்

இதையொட்டி வருவாய் கோட்டாட்சியர் பால்துரை முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், மருதிபட்டி ஊராட்சி தலைவர் வெண்ணிலா வெங்கடேசுவரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி, ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் ெதாடக்க விழாவில் கலந்துகொண்டனர்.

மஞ்சுவிரட்டுக்கான தொழுவத்தில் (திடல்) காளைகள் வரிசைப்படி நிறுத்தப்பட்டு இருந்தன.கேரள சிங்க வளநாடு மற்றும் 5 நிலை நாட்டார்கள் ஜவுளி எடுத்து வந்து, அவர்களுக்கு ஊரின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அரளிப்பாறை மலை மீது உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் வழிபாடு நடந்தது.

மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, கோவில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது. அதன்பின், அந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்டன. இந்த காளைகளை மாடுபிடி வீரர்கள், ஆங்காங்கே நின்றிருந்த இளைஞர்களும் போட்டிப்போட்டு அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் பிடிபடவில்லை. சில காளைகள் பிடிபட்டன.

முன்னதாக கட்டு மாடுகளாக ஆங்காங்கே வயல்வெளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.

மலை முழுவதும் மக்கள்

நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பார்த்து ரசித்தனர். ஏராளமானோர் மலையில் அமர்ந்து இருந்து மஞ்சுவிரட்டை பார்த்ததால், மலை முழுவதும் மக்களாக தெரிந்தது.

கட்டுமாடுகள் அவிழ்த்து விட்டதில், ஒரு மாடு முட்டி மூக்கன் (வயது 60) என்பவர் பலியானார். இவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாட்டார்மங்கலம் அரயினிப்பட்டியைச் சேர்ந்தவர். மேலும் மாடுகள் முட்டியதில் 63 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நபிஷாபானு தலைைமயில் 40 பேர் கொண்ட குழுவினர், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கேரள சிங்க வளநாடு மற்றும் 5 நிலை நாட்டார்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்