< Back
மாநில செய்திகள்
மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம்: தொழிலாளர்கள் வைத்த பேனரால் பரபரப்பு
மாநில செய்திகள்

மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம்: தொழிலாளர்கள் வைத்த பேனரால் பரபரப்பு

தினத்தந்தி
|
18 July 2024 12:15 AM IST

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பை,

மாஞ்சோலை தேயிலை தோட்டம் 99 வருட குத்தகை முடிந்து 2028-ம் ஆண்டு தமிழக அரசுக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டிய மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகள் குறித்து அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ள நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதி முழுவதும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கை என்ற பெயரில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதில், மாஞ்சோலை எஸ்டேட்டுகளை தேயிலைத் தோட்ட கழகம் மூலம் தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும், மாஞ்சோலை பகுதிகளில் நபர் ஒன்றுக்கு தலா 10 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர் பொதுமக்கள், மாஞ்சோலை எஸ்டேட் என்ற பெயரில் தேயிலை தோட்ட பகுதிகள் முழுவதும் வைக்கப்பட்டுள்ள இந்த பிளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐகோர்ட்டின் ஆணைப்படி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேலை இன்றி மாஞ்சோலை பகுதிகளிலேயே தொடர்ந்து தங்கி உள்ளனர். ஆனால், கடைசியாக வாங்கிய சம்பளம் முற்றிலுமாக செலவாகிவிட்டதாகவும் தற்போது தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தால் விருப்ப ஓய்விற்காக வழங்கப்பட்ட 25 சதவீத தொகையை செலவழித்து வருவதாகவும், இதனால் தங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் என்ற மன வேதனையில் இருப்பதாகவும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்