< Back
மாநில செய்திகள்
மானாமதுரை ரெயில்வே கேட் முன்அறிவிப்பின்றி மூடல்; 2 மணி நேரம் வாகன ஓட்டிகள் அவதி நிரந்தர தீர்வுக்கு சுரங்க பாதை அமைக்க வலியுறுத்தல்
சிவகங்கை
மாநில செய்திகள்

மானாமதுரை ரெயில்வே கேட் முன்அறிவிப்பின்றி மூடல்; 2 மணி நேரம் வாகன ஓட்டிகள் அவதி நிரந்தர தீர்வுக்கு சுரங்க பாதை அமைக்க வலியுறுத்தல்

தினத்தந்தி
|
30 Jun 2023 12:30 AM IST

மானாமதுரை ரெயில்வே கேட் முன் அறிவிப்பின்றி மூடப்பட்டதால் 2 மணி நேரம் வாகன ஓட்டிகள் அவதியடைந்தர். நிரந்தர தீர்வுக்கு சுரங்க பாதை அமைக்க வலியுறுத்தினர்.

மானாமதுரை

மானாமதுரை ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் பராமரிப்பு பணிக்காக முன் அறிவிப்பு இன்றி கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் 2 மணி நேரம் வரை அவதியடைந்து வருகின்றனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சுரங்க பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்வே கேட் மூடல்

மானாமதுரையில் ஜங்ஷன் அந்தஸ்து பெற்ற ரெயில் நிலையம் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த ரெயில் நிலையம் தான் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்ட மக்களையும் போக்குவரத்தில் இணைக்கும் முக்கிய நிலையமாகவும் இருந்து வருகிறது. இதுதவிர புனித ஸ்தலமாக உள்ள ராமேசுவரத்திற்கும் சுற்றுலா பயணிகள் சென்று வருவதால் வடமாநில மக்களும் அதிகளவில் ரெயில்கள் மூலம் சென்று வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ரெயில் நிலையத்தில் தற்போது மின்வழித்தடமாக மாற்றப்பட்டு மின்சார ரெயில்களும் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த ரெயில் தண்டவாளங்களை பராமரிப்பு பணிக்காக அவ்வப்போது ரெயில்வே ஊழியர்கள் இந்த பகுதியில் உள்ள ரெயில்கேட் பகுதிகளை மூடி பணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு பழைய பஸ் நிலையம் செல்லும் வழியில் உள்ள இந்த ரெயில்வே கேட் என்பது முக்கியமான கேட்டாக இருந்து வருகிறது.

2 மணி நேரம் காத்திருப்பு

குறிப்பாக பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும். அதேபோல் புதிய பஸ் நிலையத்திற்கும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் மானாமதுரை பகுதியில் உள்ள மக்கள் வணிக வளாகம், கோவில்கள் மற்றும் தினசரி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும்.

இத்தகைய சிறப்பு பெற்ற இந்த கேட் பகுதியில் கடந்த 10 நாட்களாக தண்டவாளங்கள் பராமரிப்பு பணிக்காக அவ்வப்போது முன்அறிவிப்பு இன்றி கேட்டை மூடுகிறார்கள். இதனால் அந்த பகுதியை கடக்க முடியாத வாகன ஓட்டிகள் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

சுரங்கப்பாதை-உயர்மட்ட பாலம்

மேலும் பள்ளிகளுக்கு குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும் பெற்றோர்கள், மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து செல்லும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுதவிர ரெயில்வே கேட் முன் பகுதியில் உள்ள தண்டவாளம் சீரமைப்புபணி நடந்த போதிலும் அதில் ஒரு பகுதியில் ஜல்லி மற்றும் கற்களை போட்டு உயர்த்தியதால் இரு தண்டவாளங்களின் பகுதியும் சம அளவில் இல்லாமல் அதில் வாகனங்கள் கடந்து செல்லும்போது பல்வேறு சிரமம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள்.

முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த வரதராஜன் கூறியதாவது:- மானாமதுரை நகரில் முக்கியமான இடமாக உள்ள இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் பல்வேறு பணிக்காக மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த கேட் பகுதியில் கடந்த 10 நாட்களாக தண்டவாளம் பராமரிப்பு பணிக்காக ரெயில்வே நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கேட்டை பூட்டி வைப்பதால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ரெயில்வே நிர்வாகம் முன்கூட்டியே இந்த பராமரிப்பு பணி குறித்த தகவலை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

சுரங்க பாதை

மேலும் இதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் கூறியதாவது:- மானாமதுரை ரெயில்வே கேட் பகுதியில் அடிக்கடி பராமரிப்பு பணிக்காக இந்த கேட் மூடப்படுவதால் மருத்துவமனை, கோவில்கள், பள்ளிகளுக்கு சென்று வருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதுதவிர இந்த ரெயில்வே பகுதி முழுவதும் மின்சார வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளதால் அதிவேகத்தில் இயங்கும் மின்சார ரெயில்களும் இங்கு இயக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண்பதற்கு இந்த கேட் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதையோ அல்லது உயர்மட்ட பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்