< Back
மாநில செய்திகள்
மானகொண்டானாறு, முள்ளியாறை தூர்வார வேண்டும்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மானகொண்டானாறு, முள்ளியாறை தூர்வார வேண்டும்

தினத்தந்தி
|
18 Oct 2023 12:15 AM IST

பருவமழை தொடங்கும் முன் மானகொண்டான் ஆறு, முள்ளியாறை தூர்வார வேண்டும் என மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.


பருவமழை தொடங்கும் முன் மானகொண்டான் ஆறு, முள்ளியாறை தூர்வார வேண்டும் என மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட ஊராட்சி கூட்டம்

நாகையில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் சண்முகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

குமார் (தி.மு.க.):- மயிலாடுதுறை மாவட்டம் ஆணை மேலகரம் ஊராட்சி அக்ரகாரம், பள்ளிவாசல், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள குறைந்த மின் அழுத்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தெரு நாய்களுக்கான கருத்தடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

கால்நடை துறை தயாராக உள்ளது

கால்நடை உதவி இயக்குனர்:- நாய்களுக்கு கருத்தடை செய்ய ஆபரேஷன் தியேட்டர்கள் தயாராக உள்ளது. மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளும், நகராட்சி அமைப்புகளும் நாய்களை பிடித்து வந்து ஒப்படைத்தால் கருத்தடை செய்ய கால்நடை துறை தயாராக உள்ளது.

சரபோஜி (இ.கயூ.):- வளர்ச்சி மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். தகுதியுள்ள விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு சம்பா சாகுபடிக்கான விதை, உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். பாலையூரில் கால்நடை பட்டி அமைக்க வேண்டும்.

முறையாக செய்வதில்லை

சுரேஷ் (தி.மு.க.):- மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால் கலெக்டருக்கு கீழ் உள்ள ஒருசில அதிகாரிகள் தங்களது பணிகளை முறையாக செய்யாததால் அரசுக்கு அவபெயர் ஏற்படும் நிலை உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளவரசி (அ.தி.மு.க.):- தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கியதை வரவேற்கிறேன். இந்த உரிமை தொகையை தகுதி உள்ளவர்கள் என பிரிக்காமல், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்க வேண்டும்.

தூர்வார வேண்டும்

சுப்பையான் (அ.தி.மு.க.):- பருவமழையின் போது அதிகமாக பாதிக்கப்படும் பகுதியாக வேதாரண்யம் உள்ளது. எனவே மானகொண்டான் ஆறு, முள்ளியாறு உள்ளிட்டவற்றை பருவமழை தொடங்கும் முன்பே சிறப்பு நிதி ஒதுக்கி உடனடியாக தூர்வார வேண்டும்.

கவுசல்யா (தி.மு.க.):- இரையாங்குடி, விழுந்தமாவடி பகுதிகளில் சாலைகள் படும் மோசமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் மாவட்ட புள்ளியியல் அலுவலர் அந்துவன்சேரல் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்