மனிதன் ஆயுதங்களை அதிகம் பயன்படுத்தியது மரங்களிடம் தான் - கவிஞர் வைரமுத்து
|பெரியோர்கள், இல்லதரசிகள், பள்ளி குழந்தைகள் எல்லோரும் ஆளுக்கு ஒரு மரம் நட வேண்டும் என கூறியுள்ளார்.
பல்லடம்,
பல்லடம், வனம் இந்தியா அறக்கட்டளையின் 53வது வான் மழை மாதாந்திர கருத்தரங்கம் வனம் அறக்கட்டளை அலுவலகமான வனாலயத்தில் நடைபெற்றது. சக்தி மசாலா உரிமையாளர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வனம் அறக்கட்டளை தலைவர் சின்னச்சாமி, செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், சிறு துளி அமைப்பு வனிதா மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர், வனம் அறக்கட்டளை செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது,
இது மனிதாபிமான விழா அல்ல, மரம் அபிமான விழா. சொல் பித்தளை, செயல் தங்கம் என்று பழமொழி சொல்வார்கள். அதுபோல மரங்களை வளர்த்து சுற்றுப்புற சூழலை காக்கும் அறிவார்ந்த மனிதர்களிடையே பேசுவதில் பெருமையடைகிறேன். இந்த பூமியில் மனிதன் உயிர் வாழத் தேவையான முக்கியமான இரண்டு காற்று, தண்ணீர்.
நன்றி இல்லாத மனிதன் அந்த இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான். அவர்களை காப்பது மரங்கள் இதை அறியாமல் உலகில் மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகித்தது மரங்கள் இடம் தான். இதுவரை அவன் அளித்தது எண்ணிலடங்கா மரங்கள், ஏன் அமோசன் காட்டின் 22 சதவீதத்தை அளித்தவன் மனிதன். வனம், சிறுதுளி போன்ற ஆர்வலர்களால் அவன் செய்த தவறுகள் சிறிதேனும் சரி செய்யப்படுகிறது.
பெரியோர்கள், இல்லதரசிகள், பள்ளி குழந்தைகள் எல்லோரும் ஆளுக்கு ஒரு மரம் நட வேண்டும். மரம் வளர்ந்தாலே மனிதம் வளரும். இந்த உலகம் 70 விழுக்காடு தண்ணீரால் சூழப்பட்டது மீதி உள்ள பகுதியில்தான் மனிதன் வாழ்கிறான். அவனுடன் புழு, பூச்சி, விலங்குகள், போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன.
இந்த பூமியில் தொண்ணூத்தி எட்டு சதவீதம் உப்பு நீர். ஒரு சதவீதம் அண்டார்டிகாவில் பனி பாறையாகயாக உள்ளது. மீதியுள்ள ஒரே சதவீதம் தான் அருவி, ஆறு, குளம் என மனிதன் அருந்தும் நீராக உள்ளது. அதனை நீ மாசுபடுத்துவது நியாயமா மனிதா, என்னைக் கேட்டால் தண்ணீரை திரவத்தங்கம் என்று சொல்வேன். பறவைகள் விலங்குகளுக்கு சொந்தமான பூமியை மனிதன் திருடிக் கொண்டு விட்டான். மேலும் காற்று, மரம் ஆகியவற்றை திருடியும் வருகிறான்.
மனிதா திருடுவதை நிறுத்து, மரங்களை நட்டு வைத்தால் அவர்களே உனக்கு அளப்பரியவற்றைத் தரும். விவசாயத்தினால் பூமியைக் கிளறினார்களே தவிர ஒருபோதும் விவசாயம் வானத்தைக் கெடுத்ததில்லை. ஆனால் தொழில் புரட்சி என்று வந்தவன் மனிதன், வானத்தை கெடுத்தான் பூமியின் ஓசோனை கெடுத்தான்.
ஓ மனிதா இவ்வளவு அழகான பூமிப்பந்தை விட்டுவிட்டு செவ்வாய்க்கிரகத்தில் நீ வசிக்க போவதாக செய்தி வந்துள்ளது. இருக்கும் ரோஜாவை எரித்துவிட்டு முள்ளையா முகர்ந்து பார்க்க போகிறாய். இனியாவது மாற்றத்தைப் பற்றி யோசி மரத்தை நேசி இவ்வாறு அவர் பேசினார்.