< Back
மாநில செய்திகள்
நண்பரை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

நண்பரை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

தினத்தந்தி
|
3 Aug 2023 7:09 PM GMT

நண்பரை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கத்திக்குத்து

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெய்வெலியை சேர்ந்தவர் பாரதிதாசன் (வயது41). இவர், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பஸ் நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (44). கூலித்தொழிலாளியான இவரும், பாரதிதாசனும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி இருவரும் மது குடிக்க பணம் இல்லாமல் இருந்துள்ளனர். அப்போது கறம்பக்குடியில் பிரகாஷின் தம்பி கணேசனிடம் பணம் கேட்க இருவரும் சென்றனர்.

அங்கு கணேசன் இல்லாததால் பாரதிதாசனுக்கும், பிரகாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாரதிதாசனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷ் குத்தினார். இதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் பாரதிதாசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.

7 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பிரகாசுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவரை திருச்சி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் புலன்விசாரணை அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்