சென்னை
மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் கைது
|மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அமைந்தகரை செனாய் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27). பட்டதாரியான இவர், வேலை தேடி வந்தார். அப்போது தனது நண்பர் மூலம் சைதாப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் (37) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.
திருவான்மியூரில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வரும் சீனிவாசன், தனக்கு மெட்ரோ ெரயில் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளை நன்கு தெரியும். அவர்கள் மூலம் மெட்ரோ ெரயில் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக சந்தோஷிடம் கூறினார். அதனை உண்மை என்று நம்பிய சந்தோஷ், இதற்காக சீனிவாசனிடம் ரூ.8 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் பணத்தை வாங்கி கொண்ட சீனிவாசன், ெசான்னபடி வேலை வாங்கி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதனால் தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி சந்தோஷ் கேட்டார். அதற்கு சீனிவாசன் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததுடன், சந்தோசுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சந்தோஷ், இது குறித்து அமைந்தக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சீனிவாசனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று திருவான்மியூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சீனிவாசனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.