திருநெல்வேலி
கோவிலில் நகை திருடியவர் கைது
|கோவிலில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி மறுகால்தலை மலை அடிவாரத்தில் பேச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு அக்கநாயக்கன்பட்டி மேல தெருவை சேர்ந்த பழனிவேல் (வயது 67) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் பூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் காலையில் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, பேச்சியம்மன் சிலையின் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க பொட்டு நகையை காணவில்லை.
இதுகுறித்து பழனிவேல் சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, சீனிவாசநகரை சேர்ந்த கண்ணன் (43) என்பவர் கோவிலில் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கண்ணனை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிராம் தங்க பொட்டு நகையை பறிமுதல் செய்தார்.