தேனி
பெண்ணிடம் 5½ பவுன் நகைகள் திருடியவர் கைது
|வீரபாண்டி கோவிலில் தூங்கிய பெண்ணிடம் 5½ பவுன் நகைகள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் தேவாரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி மாலதி (வயது 32). இவர் கடந்த 23-ந்தேதி இரவு வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். இரவு நடை அடைக்கப்பட்டதால் மாவிளக்கு எடுக்கும் மண்டபத்தில் தூங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்தார். அப்போது அவர் வைத்திருந்த பை மாயமாகி இருந்தது. அதில் இருந்த 5½ பவுன் நகைகள், ஒரு செல்போன், ரூ.6,800 ஆகியவை திருடு போனது. இதுகுறித்து அவர் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்க தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஏட்டுகள் கணேசன், விஜய், செல்வம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா (52) என்பவர் நகைகளை திருடியதாக தெரியவந்தது. இதையடுத்து முத்தையாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5½ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீசார் நேற்று தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரியகுளம் கிளை சிறையில் அடைத்தனர்.