மயிலாடுதுறை
மளிகைக்கடைக்காரரை கத்தியால் குத்தியவர் கைது
|மயிலாடுதுறையில் மளிகைக்கடைக்காரரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மளிகை கடைக்காரர்
மயிலாடுதுறை கூறைநாடு கொண்டாரெட்டித் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவர் தனது வீட்டில் வாசலில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் பஜ்ஜி ராஜா என்கிற ராஜா ( 38). இவர் மீது மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
ராஜா தனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் ரமேசின் மளிகை கடைக்கு சென்று கடன் கேட்பது வழக்கமாக வைத்திருந்தாக கூறப்படுகிறது. இதேபோல் சம்பவத்தன்று ராஜா, ரமேசின் கடைக்கு சென்று கடன் கேட்டதாக தெரிகிறது. அப்போது ரமேஷ் பணம் தர மறுத்ததாகவும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கைது
இதனால் ஆத்திரமடைந்த ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமேசை குத்தியுள்ளார். இதில் ரமேசுக்கு இடது கை விலாவில் கத்தி குத்து காயம் ஏற்பட்டது. இதனைக்கண்ட ரமேஷ் மைத்துனர் பாஸ்கரன் என்பவரது மனைவி செல்வி ஓடி வந்து தடுத்துள்ளார். அப்போது செல்வியின் வலது கையிலும் கத்தி குத்து காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ராஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.