< Back
மாநில செய்திகள்
குமரியில் பொய்த்த தென்மேற்கு பருவமழை: குட்டை போல் மாறிய மாம்பழத்துறையாறு அணை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் பொய்த்த தென்மேற்கு பருவமழை: குட்டை போல் மாறிய மாம்பழத்துறையாறு அணை

தினத்தந்தி
|
19 Aug 2023 2:30 AM IST

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் மாம்பழத்துறையாறு அணை குட்டை போல் மாறியது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் மாம்பழத்துறையாறு அணை குட்டை போல் மாறியது.

போதிய மழை இல்லை

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என இரு பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் அணைகளின் நீர்மட்டம், பாசன குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே காணப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென குறைந்தது. சிறிய குட்டை போன்று காட்சி அளிக்கிறது. நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் முக்கடல் அணையும் கடந்த 2 மாதங்களாகவே மைனஸ் அளவிலேயே உள்ளது. இவ்வாறு அணைகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

நெற்பயிர்கள் அறுவடை

குமரி மாவட்டத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை 332 மில்லி மீட்டர் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 103.9 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. வழக்கத்தை விட 69 சதவீத குறைவாகவே பெய்துள்ளது.

எனினும் பறக்கை, சுசீந்திரம் பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடைமடை பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேர நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 236 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 26 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் வந்தது.

மேலும் செய்திகள்