குஜராத்தில் ஜாமீனில் விடுதலையான மம்தா கட்சி செய்தி தொடர்பாளர் மீண்டும் கைது
|குஜராத்தில் ஜாமீனில் விடுதலையான மம்தா கட்சி செய்தி தொடர்பாளர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஆமதாபாத்,
மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருப்பவர், சாக்கெட் கோகலே.
இவர், குஜராத்தில் 135 பேரை பலி கொண்ட மோர்பி தொங்கு பால விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட பிரதமர் மோடி வந்தபோது அவரது வருகைக்கான செலவு ரூ.30 கோடி, அவரது வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே ரூ.5.5 கோடி செலவு என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தெரிய வந்துள்ளதாக கடந்த 1-ந்தேதி டுவிட்டரில் பதிவிட்டார். இந்த தகவல் தொடர்பாக உள்ளூர் பத்திரிகையில் வெளியான செய்தியையும் இணைத்திருந்தார். ஆனால் இது தவறான தகவல் என பத்திரிகை தகவல் தொடர்பகம் தெரிவித்தது.
மேலும், டுவிட்டர் பதிவு தொடர்பாக சாக்கெட் கோகலே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், அவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவல் முடிந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரை மோர்பி போலீசார் மற்றொரு வழக்கில் கைது செய்துள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மோசமான செயல் திட்டம் மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளதாக விமர்சித்ததுடன், மோர்பிக்கு 3 உறுப்பினர் தூதுக்குழுவை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.