திருப்பூர்
மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்
|மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் தேளி கே.காளிமுத்து தலைமையில் அக்கட்சியினர் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சமீபத்தில் சென்னையில் நடந்த மாமன்னன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ், நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனம் செய்தார். பல்வேறு வகையான விருதுகளையும், ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலும் இடம்பெற்ற தேவர் மகன் திரைப்படத்தை சாதி என்ற குறுகிய வட்டத்தில் அடைப்பது போன்று உள்ளது.
தமிழ்நாட்டில் வேண்டுமென்றே இருபெரும் குடிகளுக்குள் பகைமையை தூண்டி அதன் மூலம் தன் திரைப்படத்தை வெற்றி பெற வைக்கும் தீய சிந்தனையுடன் பேசிய இயக்குனர் மாரிசெல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு கொடுப்பதற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என். ராஜசேகரன், மாவட்ட தலைவர் நெல்லை தாமோதரன், இணை செயலாளர் ராஜா, பொருளாளர் ராமர், துணை தலைவர்கள் லட்சுமணன், தனசேகரன், வெள்ளதுரை, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சரவணன், தலைவர் வீரமணி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மாணவரணி மாவட்ட செயலாளர் பிரபு, தலைவர் ஜீவா, அவினாசி ஒன்றிய செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ரமேஷ், பல்லடம் ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் உள்பட கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் வந்திருந்தனர்.