கடலூர்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் முறைகேடு விசாரணை நடத்த இருப்பதாக சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் பேட்டி
|சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாகவும் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்லைக்கழகத்துக்கு நேற்று, தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சரஸ்வதி, சிந்தனைச்செல்வன், பூண்டி கலைவாணன், மாரிமுத்து, ராஜா, வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர் கொண்ட குழுவினர் வருகை தந்து, ஆய்வு கூட்டம் நடத்தினர். அப்போது, அந்த குழுவினருக்கு பல்கலைக்கழகம் சார்பில் துணைவேந்தர் டாக்டர் ஆர்.எம்.கதிரேசன் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
ஆய்வு
அப்போது, பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சினைகள், நிதி பற்றாக்குறை, பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்திற்கு அங்கீகாரம் மறுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குழுவினரிடம் அவர் தெரிவித்தார். அவருடன் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சீதாராமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக குழுவினர் பல்கலைக்கழகத்தின் இசைக்கல்லூரி, நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டார்கள். தொடர்ந்து ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் ஹரிதாஸ், சிதம்பரம் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
அரசுக்கு வருவாய் இழப்பு
பின்னர் சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிதம்பரம் நகராட்சியில் கடந்த 10 ஆண்டு காலத்தில் வாங்கப்பட்ட கழிவு நீர் மேலாண்மை பொருட்களை பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பது, மத்திய கணக்காய பிரிவின் குறிப்பு தெரிவித்துள்ளது. அது தொடர்பாக விசாரணை செய்ய வந்துள்ளோம். மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கின்ற ஆமை இனங்களை பாதுகாக்க கடலூர் மாவட்டத்தில் வனத்துறை தவறி உள்ளது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அது குறித்தும் விசாரிக்க இருக்கிறோம்.
மணல் அள்ளுவதில் விதிமீறல்
சிதம்பரம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் இடத்தை தேர்வு செய்யாமல் கிடப்பில் போட்டிருக்கிறார்கள். இதனால் 33 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தொகை வராமல் போய்விட்டது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சாலைகளை போடும் போது சரியான முறையில் தேர்வு செய்யவில்லை. தகுதியற்ற சாலைகளை தேர்வு செய்ததால் அரசுக்கு பணம் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மணல் அள்ளும் ஆற்றுப்படுகைகளில் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க உள்ளோம்.
முறைகேடுகள்
கடந்த காலங்களில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருந்து வாங்குவதில் ஊழல் நடந்துள்ளது. மருந்து உற்பத்தி செய்த தேதி, அது காலாவதியாகும் தேதி எதுவும் இல்லாமல் மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இதில் விசாரணை நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தண்டனை பெற்றுத்தரும்.
அதேபோன்று, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டுகளில் தொலைதூர கல்வி இயக்ககத்தில் பல முறைகேடுகள் நடந்திருக்கிறது. அது குறித்தும் விசாரணை நடத்த உள்ளோம். கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் கிள்ளை பகுதியில் தடுப்பணை அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.