சென்னை
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மல்லிகார்ஜூன கார்கே அஞ்சலி
|ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மல்லிகார்ஜூன கார்கே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே இந்திரா காந்தி சிலை இருந்தது. இந்த சிலையை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலை துறை சாலை விரிவாக்க பணிக்காக இந்திராகாந்தி சிலையை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைக்க அறிவுறுத்தினர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி சிலையை அப்புறப்படுத்தி ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே 30 அடி உயரம் கொண்ட மேடை அமைக்கப்பட்டு அங்கு இந்திரா காந்தி சிலை அமைக்கப்பட்டது.
இந்த சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்திரா காந்தி சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்த அவர், பேட்டரி கார் மூலம் ராஜீவ்காந்தி நினைவிடம் சென்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, விஜய் வசந்த் எம்.பி., ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜ், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.