< Back
மாநில செய்திகள்
கொட்டாம்பட்டி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடி திருவிழா- 100 சேவல்கள் பலியிட்டு விருந்து
மதுரை
மாநில செய்திகள்

கொட்டாம்பட்டி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடி திருவிழா- 100 சேவல்கள் பலியிட்டு விருந்து

தினத்தந்தி
|
12 Aug 2023 2:14 AM IST

கொட்டாம்பட்டி அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி திருவிழா நடந்தது. இதையொட்டி 100 சேவல்கள் பலியிட்டு விருந்து பரிமாறப்பட்டது.

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி திருவிழா நடந்தது. இதையொட்டி 100 சேவல்கள் பலியிட்டு விருந்து பரிமாறப்பட்டது.

ஆடி படையல் விழா

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத விழா நடைபெற்றது. இப்பகுதியில் ஆண்டுதோறும் ஆடி மாதம் படையல் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு படையல் விழா நேற்று நடைபெற்றது. மதுரைவீரன் சுவாமி ஆடிபடையல் அங்குள்ள மரத்தின் அடியில் கொண்டாடப்பட்டது. இதற்காக கிராமத்தினர் ஏராளமானோர் தங்களது வேண்டுதல் நேர்த்திக்கடனாக விதமாக சேவல்களை பலிகொடுத்து வழிபட்டனர்.

தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பக்தர்களால் படையலுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்டது. பின்னர் அதனை பலிகொடுத்து ஆண்கள் மட்டுமே அதனை சமைத்து மதுரைவீரன் சுவாமிக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.

ஆண்கள் மட்டும் பங்கேற்ற விருந்து

அதன் பின்னர் சேவல் கறியுடன், மொச்சைபயறு கலந்து கமகமவென அறுசுவை உணவு பெரிய பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்டது. இதையடுத்து பந்தி வைத்து இலை போட்டு சுடசுட அசைவ உணவு பரிமாறப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு சாப்பிட்டு சென்றனர்.

பெண்களுக்கு சுவாமி கும்பிட மட்டுமே அனுமதி உண்டு என்பதால் அவர்கள் வழிபாடு நடத்தி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். சமைக்கப்பட்ட இறைச்சி உணவுகளை பெண்கள் உண்பதும் கிடையாது. முழுக்க, முழுக்க ஆண்களுக்கு மட்டுமே விருந்து வழங்கப்பட்டது. இவ்வாறு வழிபடுவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என இப்பகுதியினரின் நம்பிக்கை.

மேலும் செய்திகள்