கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
|சென்னை அண்ணாநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைத்திருந்தாலும், வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள்ள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் கமல்ஹாசன் தலைமையில் சென்னை அண்ணாநகரில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது, கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.