ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம்
|ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 27-ந்தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில், காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்தார். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார். கருங்கல்பாளையம் காந்தி சிலை, சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம் மற்றும் அக்ரஹாரம் ஆகிய இடங்களில் தொண்டர்களுடன் சென்று, கமல்ஹாசன் வாக்கு சேகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.