போலி சாதிச்சான்றிதழ் வாங்குவதை தடுக்க விதிகளை உருவாக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
|எஸ்.சி., எஸ்.டி. என போலி சாதிச்சான்றிதழ் வாங்குவதை தடுக்க உரிய விதிகளை 8 வாரத்துக்குள் வகுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என சாதிச்சான்று வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் உரிய விதிகளை வகுக்கக்கோரி சி.சொக்கலிங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
எஸ்.சி., மற்றும் எஸ்.டி., சாதிச்சான்றுகள் வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. அதன்படி மாநில அளவில் சாதிச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு குழுக்கள் அமைக்கவும், எஸ்.டி., அல்லது எஸ்.சி. எனக்கூறி போலி சான்றிதழ்கள் பெறுவது தொடர்பான புகார்களை விசாரிக்க கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தவும், பொய் சொல்லி பழங்குடியினர் சாதிச்சான்று பெற விண்ணப்பித்து இருந்தால் அவர்கள் மீது வழக்கு தொடரவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சட்டம் இல்லை
கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டும் இதுதொடர்பான விதிகளை வகுத்துள்ளது. இந்த சூழலில் வெறும் மானுடவியல் அறிக்கையை மட்டுமே அடிப்படையாக வைத்து சாதிச்சான்றிதழ்களை வழங்கக்கூடாது. அதேநேரம் பெற்றோர் மற்றும் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு ஏற்கனவே சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் அதனடிப்படையில் விண்ணப்பிப்பவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க முடியாது என மறுக்கவும் முடியாது.
போலியாக சாதிச்சான்றிதழ்களை பெறுவதை தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டும், இதுவரை தமிழ்நாடு அரசு அதற்காக எந்தவொரு பிரத்யேக சட்டமும் இயற்றவில்லை.
சிறப்பு வகுப்புகள்
அதேபோல சாதிச்சான்று வழங்கும் அதிகாரிகளுக்கு, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு தீர்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். மேலும், எஸ்.சி., எஸ்.டி. என சாதிச்சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறுமின்றி சான்றிதழ்களை பெறும் வகையிலும், போலியாக சாதிச்சான்றிதழ்களை பெறுவதை தடுக்கும் வகையிலும், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்புகள், அரசாணைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக 8 வாரங்களில் உரிய விதிகளை வகுத்து வெளியிட வேண்டும்.
அத்துடன் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்கும் என நம்புகிறோம். வழக்கை முடித்து வைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.