சென்னை குடிநீர் வழங்கல் வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குங்கள்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
|சென்னை குடிநீர் வழங்கல் வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"சொன்னதைச் செய்வேன், செய்வதைத் தான் சொல்வேன்" என்பதைத் தமிழக மக்களுக்கு எனது உறுதிமொழியாக வழங்குகிறேன் என்று சொல்லி "புதிதாக இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்" என்ற வாக்குறுதியை அளித்த திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு 'அம்மா உணவகங்களில் பணியாளர்களை குறைத்தல்', 'பணி நாட்களை குறைத்தல்', 'அம்மா மினி கிளினிக்குகளை மூடுதல்' என்ற வரிசையில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை ஒப்பந்த ஊழியர்களாக மாற்றி 'உள்ளதும் போச்சு' என்ற நிலைக்கு தமிழக மக்களை ஆளாக்கி இருக்கிறது.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியத்தில் கிட்டத்தட்ட 2,000 தற்காலிக தொழிலாளர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருவதாகவும், தற்காலிக பணியாளர்கள் என்றாலும் தங்களுக்கான சம்பளத்தை சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்திடம் இருந்துதான் இதுநாள் வரை பெற்று வந்ததாகவும், தற்போது மேற்படி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு திமுக அரசு தாரைவார்த்து விட்டதால், பத்து ஆண்டுகள், பதினைந்து ஆண்டுளாக பணிபுரிந்து வந்த தற்காலிகப் பணியாளர்களை ஒப்பந்த ஊழியர்களாக திமுக அரசு மாற்றியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
இதனை எதிர்த்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் ஐந்தாவது நாளாக அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'உயிரே போனாலும் அறப் போராட்டம் தொடரும்' என்று குடிநீர் வாரிய ஊழியர்கள் அறிவித்து இருக்கிறார்கள். இந்த அறப் போராட்டத்திற்கு அதிமுக தனது முழு ஆதரவினை அளிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, வாரியத்தில் பணிபுரிந்து வந்த தற்காலிக ஊழியர்களை ஒப்பந்த ஊழியர்களாக மாற்றிய திமுக அரசிற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டதற்கு, வாரியத்தில் இக்கட்டான சூழ்நிலை நிலவுவதாகவும், பெரும்பாலான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்து இருப்பதாக செய்திகள் வருகின்றன. போராடும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போராடும் ஊழியர்களுக்குப் பதிலாக புதிய ஊழியர்களை வாரியம் நியமித்து வருவதாகவும், ஆனால் அவர்களுக்கு இயந்திரங்களை இயக்குவதற்கான திறனும், கழிவுநீர் அடைப்பை நீக்குவதற்கான அனுபவமும் இல்லை என்றும், சென்ற மாத ஊதியம் கூட அவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் போராடும் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
திமுக அரசின் தேர்தல் அறிக்கையில், "அறநிலையத் துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலைக் குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு பணியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்" என்று வாக்குறுதியை அளித்து அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களை ஒப்பந்த ஊழியர்களாக மாற்றுவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். இது மக்களை ஏமாற்றும் செயல்.
வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், அதற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது ஒரு ஆட்சிக்கு அழகல்ல. பணி நிரந்தரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஊழியர்களை தனியார் துறை ஊழியர்களாக மாற்றி இருக்கிறது திமுக அரசு. அரசே ஏமாற்றும் பணியில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது. இதற்குப் பெயர் 'சொன்னதைச் செய்வேன்' என்பதல்ல. 'சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' என்பதுதான் இதன் பொருள். இது திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு ஓர் எடுத்துகாட்டு. இதுபோன்றவற்றை எல்லாம் 'சாதனை' என்று சொல்வது தான் ஒரு வேளை 'திராவிட மாடல்' போலும்! 'திராவிட மாடல்' ஆட்சி தேவை இல்லை என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.
எனவே, தமிழக முதல் அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தேர்தல் வாக்குறுதிப்படி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், தனியார் நிறுவன ஊழியர்களாக ஆக்கியதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்குரிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல் அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், சென்னை குடிநீர் வாரிய ஊழியர்களின் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை முதல் அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.