< Back
மாநில செய்திகள்
10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பல்லாங்குழியாக மாறிய பிரதான சாலைகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பல்லாங்குழியாக மாறிய பிரதான சாலைகள்

தினத்தந்தி
|
24 Jan 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சியில் 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பல்லாங்குழியாக மாறிய பிரதான சாலைகள்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி நகராட்சியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தலைநகரமாக இருப்பதால் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கள்ளக்குறிச்சிக்கு வந்து செல்கிறார்கள். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்டஅனைத்து துறை அலுவலகங்களும் இங்கேயே இருப்பதால் அந்த அலுவல் சம்பந்தமான பணிகள் மற்றும் கோரிக்கைகளுக்காக மக்கள் வருகிறார்கள்.

இதனால் கள்ளக்குறிச்சிக்கு தினமும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இவ்வாறு வருகை தரும் பொதுமக்கள் பஸ் மற்றும் கார், இருசக்கர வாகனங்களில் வருகிறார்கள். ஆனால் அதற்கு ஏற்ற போதிய சாலை வசதிகள் இல்லை என வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

பிரதான சாலைகள்

ஆம், இங்குள்ள சேலம் மெயின்ரோடு, துருகம் மெயின்ரோடு ஆகிய இரு பிரதான சலைகளும் தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம், சென்னை, கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், வேப்பூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட புறநகர்கள் மற்றும் கிராமங்களுக்கு செல்லும் 400-க்கும் மேற்பட்ட பஸ்கள், 100-க்கும் மேற்பட்ட பள்ளி பஸ்கள் துருகம் மெயின்ரோடு வழியாகத்தான் வந்து செல்கின்றன. இது தவிர சேலம் மார்க்கத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மற்றும் சென்னைக்கு செல்லும் 100-க்கும் மேற்பட்ட பஸ்களும் இந்த வழியாகத்தான் பஸ் நிலையத்துக்குள் வருகின்றன.

அதேபோல் கள்ளக்குறிச்சியிலிருந்து சின்ன சேலம், ஆத்தூர், சேலம், ஈரோடு, ராசிபுரம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட புறநகர்கள் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் சேலம் மெயின்ரோடு வழியாக செல்கிறது. மேலும் பஸ்களை தவிர இந்த இரு சாலைகளிலும் கார், ஆட்டோ, லாரி, டிராக்டர், வேன், இருசக்கர வாகனங்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரத்தக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது.

குண்டும், குழியுமாக

மேலும் ஜவுளி, நகை, ஓட்டல், எலக்டரானிக்ஸ், பர்னிச்சர், மளிகை, காய்கறிகடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் இந்த சாலைகளில் தான் உள்ளன. இதனால் இந்த சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்து மிகவும் பரபரப்பாக காணப்படும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இரு சாலைகளையும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய நெடுங்சாலைத்துறை பராமரிப்பு செய்யாமல் இருப்பதால் குறிப்பிட்ட 2 சாலைகளும் குண்டும், குழியுமாக மாறி விட்டதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சாலையின் இருபுறங்களிலும் 3 மீட்டர் அகலத்துக்கு மண் சாலையாக உள்ளதால் இப்பகுதி குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. -

சீரமைக்க வேண்டும்

மழைக்காலங்களில் பள்ளமான பகுதிகளில் மழை நீருடன், கழிவுநீர் இரண்டற கலந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. அப்போது அந்த வழியாக வரும் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது தண்ணீரை வாரி இறைத்தபடி செல்வதால் அவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி இருக்கிறார்கள்.

எனவே மழைநீர் தேங்காமல் இருக்க சேதமடைந்த இரு சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், சாலைகளின் இரு புறங்களிலும் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்